Tuesday, November 3, 2015

சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி செல்வதால் சாலைகள் சேதம்: 70 லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி செல்வதால் சாலைகள் சேதம்: 70 லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி செல்வதால் சாலைகள் சேதம் அடைந்ததை கண்டித்து 70 லாரிகளை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.

சுண்ணாம்பு கல்குவாரிகள்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழப்பழுவூர் போலீஸ் சரகம் இடையத்தான்குடி பகுதியில் பனங்கூர், ஏழேரி, இடையத்தான்குடி பகுதியில் பல சுண்ணாம்பு கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் சுண்ணாம்புக்கலை ஏற்றும் லாரிகள் ஜெயங்கொண்டம் பொய்யூர் சாலையில் உள்ள இடையத்தான்குடி வழியாக தான் தனியார் சிமெண்டு ஆலைகளுக்கு சென்று வருகின்றன.

லாரிகள் அதிகமாக செல்வதால் இந்த சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் லாரிகளில் இருந்து சுண்ணாம்பு கற்கள் கொட்டுவதால் மழைக்காலமான தற்போது சாலை சேறும் சகதியாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலையாக மாறிவிட்டது. கனரக லாரிகள் மட்டுமே இவ்வழியாக செல்கின்றன. மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

லாரிகள் சிறைபிடிப்பு

அதிகமாக சுண்ணாம்பு கல் ஏற்றும் கனரக வாகனங்கள் செல்வதனால் தான், இந்த சாலை மிகவும் மோசமாகி விட்டது எனவும், இந்த சாலைகளை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், ஆரனூர் கிராம பொதுமக்கள் வைப்பம்-ஆரனூர் பிரிவு சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டு அவ்வழியே சுண்ணாம்பு கற்கள் ஏற்றி வந்த 70 லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் அரியலூர் தாசில்தார் திருமாறன் போராட்டக்காரர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோசமான சாலை விரைவில் சரிசெய்யப்படும் என உறுதி கூறினார்.

இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரகுபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

Thanks to Thina Thanthi.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More