Saturday, November 7, 2015

அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்களில் தேசிய திறனாய்வு தேர்வு இன்று நடக்கிறது 4,164 மாணவ–மாணவிகள் எழுதுகின்றனர்

அரியலூர்,

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில், 12 மையங்களில் இன்று நடைபெற உள்ள தேசிய திறனாய்வு தேர்வினை 4,164 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

தேசிய திறனாய்வு தேர்வு

பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் தேர்வே தேசிய திறனாய்வு தேர்வு (என்.டி.எஸ். தேர்வு) ஆகும். 9–ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 60 சதவீதத்திற்கும் மேலாக மதிப்பெண் பெற்று தற்போது பள்ளிகளில் 10–ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுத தகுதியுடையவர்கள் ஆவர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மேல்படிப்பு படிப்பதற்காக ஊக்கத்தொகை வழங்கப்படும்.

1,987 பேர் எழுதுகின்றனர்

அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வினை அரியலூர் மாவட்ட பள்ளிகளில் 10–ம் வகுப்பு பயிலும் 1,987 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதில் காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன்–மொழித் தேர்வும், இதையடுத்து 30 நிமிட இடைவேளைக்கு பிறகு காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடைபெறுகிறது. மேற்கண்ட தகவலை அரியலூர் மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்து உள்பட அதிகாரிகள் பலர் செய்து வருகின்றனர்.

பெரம்பலூரிலும்...

இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள தேசிய திறனாய்வு தேர்வினை 2,177 மாணவ–மாணவிகள் எழுத உள்ளனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ராமகிருஷ்ணன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,பெரம்பலூர் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, புனித தொமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனிசாமி உள்பட கல்வி அதிகாரிகள் பலர் செய்து வருகின்றனர்.

 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More